×

திருக்குறளில் வேல்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வேல் பழந்தமிழர்கள் பயன்படுத்திய படைக் கருவிகளில் ஒன்று. விலங்குகளை வேட்டையாடவும், போரில் பகைவர்களுக்கு எதிராகவும் வேல் கருவி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. தமிழ்க் கடவுளான முருகன் கையில் இருப்பது வேலாயுதம்தான். வேலைப் பற்றித் திருக்குறள் பற்பல குறட்பாக்களில் குறிப்பிடுகிறது.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
(குறள் எண் 500)

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற வலிமை மிக்க யானை, சேற்றில் சிக்கிக் கொண்டால், அதை நரிகூடக் கொன்றுவிடும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
(குறள் எண் 546)

மன்னனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அல்ல. கோணாத செங்கோல் ஆட்சியே அவனுக்கு வெற்றியைத் தரும்.

வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு.
(குறள் எண் 552)

தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன், தன் குடிமக்களிடம் வரி வசூலிப்பது, நெடுவழிப் பயணிகளிடம் வேலைக் கையில் வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிப்பதைப் போன்றது.

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(குறள் எண் 772)

காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, எதிர்த்துவரும் யானைமீது பட்டும் அதை வீழ்த்தாத வேலை ஏந்துதல் இனிது.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
(குறள் எண் 774)

தன்னை எதிர்த்துவந்த யானையின்மீது, தன் கையிலிருந்த வேலை எறிந்த வீரன், அடுத்து வருகின்ற யானைமேல் எறிவதற்காக தன் மார்பில் ஏற்கெனவே பதிந்து நின்ற வேலைப் பறித்துக்கொண்டே மகிழ்வான்.முருகப் பெருமானின் சரித்திரத்தை விவரிக்கும் கந்தபுராணத்தில், வேல் முக்கிய இடம் வகிக்கிறது. முருகனின் அன்னை பார்வதி தேவி, தன் சக்தி முழுவதையும் திரட்டி ஒரு வேலில் அடக்கினாள். அந்த வேலே சக்திவேல் எனப்படுகிறது. அந்த வேலைத்தான் சூரபத்மனை வதம் செய்யும்பொருட்டுத்தன் இளையமகன் முருகனிடம் அவள் வழங்கினாள்.

முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடந்த கடும்போரில், சூரபத்மன் ஒரு மாபெரும் மாமரமாக மாறி நின்றான். முருகன் தன் வேலால் அந்த மரத்தை இரண்டாகப் பிளந்தான். அதன் ஒரு பகுதி மயிலாகவும், மறுபகுதி சேவலாகவும் மாற, முருகப்பெருமான் மயிலைத் தன் வாகனமாக்கிக் கொண்டு, சேவலைத் தன் கொடியாக வைத்துக் கொண்டான் என்கிறது கந்த புராணம்.

தீயசக்தியை அழித்தது முருகன் கைவேல். வேலை வணங்கினால் அது நம் மனத்தில் உள்ள தீய எண்ணங்களை அழித்து, மனத்தை மாசில்லாததாக மாற்றும். முருகன் கையில் உள்ள வேலின் வடிவம் நம் அறிவைப் பற்றியே மறைமுகமாகச் சொல்கிறது. நம் அறிவு வேலைப் போல் பரந்ததாகவும், அதே நேரம் வேல் போலவே கூர்மையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி வேல் போல் அறிவிருக்குமெனில், இந்த வாழ்க்கையை நம்மால் வெல்ல முடியும்.

அன்னை பராசக்தியிடம் முருகன், வேலாயுதத்தைப் பெற்றுக்கொண்ட நிகழ்வை முருகன் ஆலயங்களில் விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் ஓர் அம்சமாக, இந்த விழா நடைபெறுகிறது. `வேல்வாங்கும் விழா’ என்றே இவ்விழா அழைக்கப் படுகிறது. பல முருகன் ஆலயங்களில் முருகனுக்கு உள்ள சந்நதி போன்றே, வேலுக்கென்றும் தனி சந்நதி உண்டு. அங்கே முருகனுக்கு இணையாக அவன் கையில் உள்ள வேல் என்னும் போர்க்கருவி தனித்து வழிபடப்படுகிறது.

வேலை வணங்கினால் விக்கினங்கள் நீங்கும் என்றும் எதிரிகள் தோல்வியைத் தழுவுவார்கள் என்றும் அடியவர்கள் நம்புகிறார்கள். சங்க கால மன்னனான நல்லியக்கோடன் பெரும் முருக பக்தனாக இருந்தான். அறவழியில் நல்லாட்சி நடத்தியவன், அவனது பெரும் புகழ்கண்டு அவனை வீழ்த்த எண்ணிய பகை மன்னர்கள், அவன் நாட்டின்மேல் படையெடுத்து வருவதாகச் செய்தி வந்தது.

கார்த்திகை நட்சத்திரம் தோறும் முருகனுக்கு பூஜை செய்வது அவன் வழக்கம். அன்றும் கார்த்திகையாக அமையவே, முருகப் பெருமானுக்குப் பக்தியுடன் பூஜைசெய்து விட்டு, பகைவர்களிடமிருந்து தன்னையும் தன் நாட்டையும் காக்குமாறு முருகனிடம் வேண்டிக்கொண்டு உறங்கச்சென்றான். அவன் கனவில் வந்தார் முருகக்கடவுள்.

`என் ஆலயக்குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களே உனக்கு ஆயுதமாகட்டும். நாளை வெற்றி உனதே’ எனக் கூறி மறைந்தார். மறுநாள் காலை முழு நம்பிக்கையோடு முருகன் ஆலயக்குளத்துத் தாமரைகளைப் பறித்துவந்து, தன்னை எதிர்த்த பகைவர் மேல் வீசியெறிந்தான். என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு தாமரை மலரும் பல்லாயிரம் வேல்களாக மாறிப் பகைவர்களின் படைகளைத் தாக்கத் தொடங்கின. என்ன நடக்கிறது என்றறியாத பகைவர்கள், அச்சத்துடன் புறமுதுகிட்டு ஓடினர். அவ்விதம், முருகன் அருளால் தாமரை மலர்களை வேலாக்கி எறிந்து வென்ற ஊர் என்பதால், நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஊர் வேலூர் எனப் பெயர் பெற்றது.

திறல்வேல் நுதியில் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர்

என இந்தச் செய்தியை பத்துப் பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப் படை பேசுகிறது. ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக் கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு, நத்தத்தனார் என்ற சங்கப்புலவர் எழுதிய நூல் இது.நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூலின் இறுதியில் முருகனின் வேலைப் போற்றும் சில வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த வெண்பாக்களின் நடையைப் பார்க்கையில், இவற்றை நக்கீரர் எழுதியிருக்க இயலாது என்றும், பிற்காலப் புலவர்கள் எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் என்றும் கருதுவதுண்டு. யார் எழுதினால் என்ன? முருகன் அடியவர் எழுதிய வெண்பாக்கள் அவை. சொல்லழகும், பொருளழகும் நிறைந்த அந்த அழகிய வெண்பாக்களில் வேலைப் போற்றும் சில வெண்பாக்கள் இதோ:

`வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.’
`அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்
– நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.’
`குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர்
செய்ததுவும்

அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் –
இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில்
காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.’

அருணகிரிநாதர், முருகப்பெருமானின் கரத்தில் உள்ள வேலின் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்து `வேல்விருத்தம்’ என்ற செய்யுள் நூல் படைத்துள்ளார். பத்து ஆசிரிய விருத்தங்களால் அமைந்த தமிழ்நயம் செறிந்த சிறிய நூல் இது. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரத்திலும் பல பாடல்களில் வேல் போற்றப்படுகிறது. வேலைக் கையில் வைத்துள்ள முருகனின் கால்பட்டு அடியவர் தலைமேல் எழுதப்பட்டுள்ள பிரம்மனின் கையெழுத்து அழிந்துவிடும் என்றும் அடியவர்களுக்கு மங்கலங்கள் தோன்றும் என்றும் எழுதுகிறார் அருணகிரியார்.

`சேல்பட் டழிந்தது செந்தூர் வயல்பொழில்
தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடியார்மனம்
மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும்
வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்தலை மேலயன்
கையெழுத்தே!’

`வருவாய் வடிவே லவனே’ என்றும் `வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா வடிவேலவா! அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா வடி வேலவா!’ என்றும் கையில் வேல்வைத்துள்ள வேலவனைப் போற்றுகிறார் மகாகவி பாரதியார். கவிஞர் பூவை செங்குட்டுவன் எழுதி, சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஒலித்த புகழ்பெற்ற பக்திப் பாடல் ஒன்று, வேலை வணங்கும்போது, கைகளின் வடிவமே வேலைப் போல் உள்ளதாகச் சொல்லி முருகனைப் போற்றுகிறது. வணங்கும் கைகளின் வடிவத்தை வேலோடு ஒப்பிடும் அழகிய உவமை இது.

வணங்கிடும் கைகளின் வடிவத்தைப்
பார்த்தால்
வேல்போல் இருக்குதடி!
வேல்கொண்டு நின்றவன் திருமுகம்
பார்த்தால்
பால்போல் தெரியுதடி!
கவிஞர் குகன் எழுதி, மதுரை மணி

ஐயர் இசைக் கச்சேரிகளில் பாடிப் பிரபலப் படுத்திய பாடல் ஒன்று வேலைப் போற்றித் துதிக்கிறது. `கந்தன் கருணை புரியும் வடிவேல்’ எனத் தொடங்கும் அந்தப் பாடலின் வரிகள் வேலின் பெருமைகளைப் பேசுகின்றன.

வெம்பகை கொல்வேல் வெற்றிதரும்வேல்
வேதப் பொருளை விளக்கும் மயில்வேல்
நம்பும் அடியார்களின் நலம் வளர்க்கும்வேல்
நங்கை வள்ளியின் திரு நாயகன் கைவேல்
குன்றுதோறாடும் குமரன் அருள்வேல்
கோல மயில்நடம் கொஞ்சிடும் செவ்வேல்
அண்டம் வேண்டிடும் ஆதிமகள் நம்
அன்னை பராசக்தி அருள்சுடர் வேல்

கல்கி எழுதிய `பார்த்திபன் கனவு’ கதை, அதே தலைப்பில் திரைப்படம் ஆக்கப்பட்டபோது கண்ணதாசன், `பழகும் தமிழே பார்த்திபன் மகனே’ எனத் தொடங்கும் பாடல் ஒன்றை அந்தப் படத்திற்காக எழுதினார். அந்தப் பாடலில் மன்னன் வேல் எறிந்து வீரர்களை வீழ்த்துபவன் என்று புகழப்படுகிறான்.

பழகும் தமிழே பார்த்திபன் மகளே
அழகிய மேனி சுகமா
பாவலன் கவியே பல்லவன் மகளே
காவலன் மேனி சுகமே உன்
கைகளினால் வந்த குணமே…
வேலாலெறிந்து வெல்லும் – உங்கள்
வீரமும் காதல் சொல்லும்
பால்போல் தெளிந்த முகமும் – நான்
பார்த்ததும் ஆசையில் துள்ளும்…’

`சித்ராங்கி’ திரைப்படத்தில் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதி பி. சுசீலா குரலில் ஒலிக்கும் பாடல், வேலோடு விளையாடும் முருகன், தலைவியின் வாழ்வோடும் விளையாட வந்துவிட்டானா என உருக்கத்துடன் கேட்கிறது.

வேலோடு விளையாடும் முருகையா – என்
வாழ்வோடும் விளையாட வந்தனையா?
குறவள்ளி மணமாலை தனைச் சூடினாய்
– தேவ
குலத்தோடு இணைந்தே நீ உறவாடினாய்
– என்ன
குறைகண்டு எனக்கிந்த நிலை காட்டினாய்
– நீ
குடிகொண்ட என் நெஞ்சை ஏன் வாட்டினாய்?

வேலை மையமாக வைத்துப் பல தமிழ்ப் பெயர்கள் வழக்கில் உள்ளன. வேலம்மாள், வேலப்பன், வேலாயுதம், வேல்முருகன் போன்றவை வேலைத் தொடக்கத்தில் வைத்து எழுந்த பெயர்கள். வடிவேல், ஞானவேல், கந்தவேல், சக்திவேல். பழனிவேல், வஜ்ரவேல், முத்துவேல், மாணிக்கவேல், தங்கவேல் போன்றவை வேலை இறுதியில் வைத்து எழுந்த பெயர்கள். இந்துக் கடவுளரின் ஆயுதங்களில் இப்படிப் பல்வேறு வகையில் பெயர் பெற்ற பெருமை முருகனது வேலுக்கு மட்டுமே உரியது.

பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை `தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடங்கும் கவிதை. அதில் தமிழ்மொழியைப் புலவர்கள் கையில் உள்ள வேல் என்று புகழ்கிறார் பாரதிதாசன்.

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்.

தமிழ் என்ற வேலைக் கையிலெடுத்து, அநியாயங்களைத் தாக்கித் தகர்த்து அறத்தை நிலைநாட்டும் திருவள்ளுவர், வேலை மையமாக வைத்தும் பல செய்திகளைத் தந்திருப்பதில் வியப்பில்லை.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

The post திருக்குறளில் வேல்! appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,
× RELATED திருக்குறளில் உலகம்!